பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு


பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு
x

சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பெங்களூரு:-

மெட்ரோ ரெயில் சேவை

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக ெபங்களூரு நகரில் எங்கு பார்த்தாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் நகரில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, கெங்கேரி-பையப்பனஹள்ளி உள்பட 3 முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பையப்பனஹள்ளியில் இருந்து மெஜஸ்டிக், எம்.ஜி.ரோடு பகுதிக்கு வருவதற்கு சுலபமாக உள்ளதால், காலை நேரங்களில் வேலைக்காக செல்பவர்கள் மெட்ரோ ரெயில்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை சுமார் 2 மணி நேரம் மெட்ரோ சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

சிக்னல் கோளாறு

இந்த நிலையில் நேற்று காலையில் சுமார் 7.30 மணி அளவில் பையப்பனஹள்ளி மெட்ரோ நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் ஒன்று புறப்பட்டது. அப்போது திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. சிக்னல் கோளாறு குறித்து மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனால் பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டது. மெட்ரோ சேவை திடீரென பாதிக்கப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குறித்த நேரத்திற்குள் பணிக்கு சென்றுவிடுவோமா என்றும் பதற்றம் அடைந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு, மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. அதன்பிறகு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் 2 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டன. நேற்று முழுவதும் இந்த பிரச்சினை இருந்ததாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.


Next Story