மஞ்சள், ஊதா நிற வழித்தடங்களில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை; நிர்வாக இயக்குனர் தகவல்
மஞ்சள், ஊதா நிற வழித்தடங்களில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என்று நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மஞ்சள் மற்றும் ஊதா நிற மெட்ரோ தடங்களை பன்னரகட்டா சாலையில் இணைக்கும் மெட்ரோ நிலையப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஷ் கூறுகையில், பெங்களூருவில் நடைபெறும் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
ஆர்.வி.சாலை- பொம்மசந்திரா இடையே நடைபெறும் மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும். இந்த வழித்தடத்தில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒன்றில் வாகன போக்குவரத்தும், அதற்கு மேல் உள்ள மேம்பாலத்தில் மெட்ரோ ரெயில்களும் இயக்கப்படும். பன்னரகட்டா சாலையில் உள்ள ஜெயதேவா மெட்ரோ நிலைய பணிகள் வருகிற டிசம்பம் மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
ஆர்.வி.ரோடு- பொம்மசந்திரா மற்றும் நாகவாரா மெட்ரோ வழித்தடங்களை இணைக்கும் நிலையமாக இது உள்ளது. இந்த 2 வழித்தடங்களும் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேர் வரை பயணம் செய்வார்கள் என்றார்.