ஓடும் ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளி கொலை...வெளிமாநில தொழிலாளி கைது


ஓடும் ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளி கொலை...வெளிமாநில தொழிலாளி கைது
x
தினத்தந்தி 3 April 2024 9:58 AM GMT (Updated: 3 April 2024 11:01 AM GMT)

ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளி கொலை செய்த வெளிமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயிலில் எர்ணாகுளத்தை சேர்ந்த வினோத் என்பவர் டிக்கெட் பரிசோதகராக இருந்தார்.

எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று திருச்சூர் ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து கிளம்பியபோது வினோத் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்தார். அப்போது ரஜனிகாந்தா என்ற வெளிமாநில தொழிலாளி ஒருவர் டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணிப்பது தெரியவந்தது.

அவரிடம் வினோத் விசாரித்து கொண்டிருந்தபோது, அந்த தொழிலாளி திடீரென வினோத்தை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டார். இதில் வினோத் தண்டவாளத்தில் விழுந்த நிலையில் எதிர்திசையில் இருந்து வந்த ரெயில் அவர் மீது ஏறி சென்றது. இதில் அவர் உடல் துண்டு துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

வினோத்தை தள்ளிவிட்டு கொலை செய்த வெளிமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த வினோத்தின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி உறுதியளித்துள்ளார்.


Next Story