நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மந்திரி அசோக் ஆய்வு; மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்


நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மந்திரி அசோக் ஆய்வு; மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்
x

குடகில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மந்திரி அசோக் ஆய்வு செய்தார். அப்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடகு;

நிலநடுக்கம் பாதிப்பு

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா செம்பு மற்றும் கரிகே உள்பட சில கிராமங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 முறை நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பூமி அதிர்ச்சி மற்றும் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுவதும், வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்படுவதும் என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். வருகிற நாட்களிலும் இதுபோன்ற நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும் பாதிப்புகள் ஏற்படாது என்று தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மந்திரி அசோக் ஆய்வு

இந்நிலையில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட செம்பு, காிகே, கர்தோஜே போன்ற இடங்களில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள மக்களிடம் நிலநடுக்கம் ஏற்படும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

மலைப்பகுதியையொட்டி உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றார். இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளையும் மந்திரி அசோக் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், குடகில் அதிக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். வீடுகளை இழந்த மக்களுக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும். நிலநடுக்கம் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை என்றார்.


Next Story