சி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு


சி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு
x
தினத்தந்தி 12 March 2024 6:35 AM GMT (Updated: 12 March 2024 6:51 AM GMT)

மத அடிப்படையிலான துன்புறுத்தல் காரணமாக தஞ்சம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி செய்கிறது.

மத அடிப்படையிலான துன்புறுத்தல் அல்லது மத அடிப்படையிலான துன்புறுத்தல் குறித்த பயம் காரணமாக 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கு, இந்த சட்ட விதிகள் உதவுகின்றன.

இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளித்தார். ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததால் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. எனினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன், இந்த சட்ட விதிகளின் கீழ் இந்திய குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக தனி இணையதளத்தை (https:/indiancitizenshiponline.nic.in) மத்திய அரசு தொடங்கி உள்ளது.

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த இணையதளத்தில் குடியுரிமை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.


Next Story