வாகனங்களை அழிக்க ஆண்டு வரம்பு நிர்ணயமா? - மத்திய அரசு விளக்கம்
வாகனங்களை அழிக்கும் கொள்கைப்படி வாகனங்களை அழிக்க அவற்றுக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், வாகனங்களை அழிக்கும் கொள்கையை உருவாக்கி உள்ளது. இதன்படி, சாலையில் ஓடுவதற்கு தகுதியற்ற வாகனங்கள், மாசு உண்டாக்கும் வாகனங்கள் உடைத்து நொறுக்கப்படும்.
இதற்கிடையே, இக்கொள்கைப்படி, விவசாய டிராக்டர்கள், 10 ஆண்டை கடந்தவுடன் கட்டாயமாக அழிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சகம் கூறியிருப்பதாவது:-
விவசாய டிராக்டர்கள், போக்குவரத்து சாராத வாகனம் ஆகும். தொடக்கத்தில், 15 ஆண்டுகளுக்கு டிராக்டர் பதிவு செய்யப்படுகிறது. 15 ஆண்டுகள் முடிந்தவுடன், 5 ஆண்டுகளுக்கு ஒருதடவை பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனவே, 10 ஆண்டுகள் முடிந்தவுடன் டிராக்டர்கள் அழிக்கப்படும் என்பது பொய்யான தகவல். அதில் உண்மை இல்லை. இதுபோல் பீதி உண்டாக்க பொய் தகவல் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பிட்ட அரசு வாகனங்களை தவிர, வேறு எந்த வாகனத்துக்கும் அவற்றை அழிக்க வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எத்தனை காலம் தகுதி சோதனையில் தேறுகிறதோ, அத்தனை காலம் சாலையில் ஓடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.