டெல்லி: வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்த 17 வயது சிறுவன்..! போலீசார் விசாரணை
மத்திய டெல்லியின் ஆனந்த் பர்பத் பகுதியில் 17 வயது சிறுவன் வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்துள்ளான்.
புதுடெல்லி,
மத்திய டெல்லியின் ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள ராம்ஜாஸ் பள்ளிக்கு அருகில் உள்ள எச்ஆர் சாலையில் 17 வயது சிறுவன் வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடப்பதாக ஆனந்த் பர்பத் காவல் நிலையத்திற்கு காலை 7.15 மணியளவில் அழைப்பு வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்த சிறுவன் ஆனந்த் பர்பத்தில் வசிக்கும் விஜய் என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்காக சிறுவனின் சடலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய போலீசார், சந்தேகத்தின் பேரில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.