பேஸ்புக் காதலால் விபரீதம்: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து வீசிய கும்பல்
சிறுமிக்கு பேஸ்புக் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அகர்தலா,
திரிபுரா மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமி அந்த இளைஞருடன் பேஸ்புக் மூலம் பேசி வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதனிடையே, கடந்த புதன்கிழமை சந்திக்க வேண்டும் என்று அந்த சிறுமியிடம் இளைஞன் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து திபென்யா பகுதியில் உள்ள பூங்காவிற்கு அந்த சிறுமி வந்துள்ளார்.
அப்போது, சிறுமியுடன் அந்த இளைஞனும் சந்தித்துள்ளனர். பின்னர் சிறுமியுடன் வலுக்கட்டாயமாக அந்த இளைஞர் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த சிறுமி அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், அந்த சிறுமியை பூங்காவில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அந்த இளைஞனுடன் வந்த மேலும் 2 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், சிறுமியை காரில் ஏற்றி சென்ற அந்த 3 பேரும் ராஜர்பக் பகுதியில் வந்தபோது ஓடும் காரில் இருந்து சிறுமியை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி பின்னர் வீடு திரும்பிய நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
புகார் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பேஸ்புக் இளைஞனரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அந்த நபர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.