மிசோரம் சட்டசபை தேர்தல்: மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் - முதல்-மந்திரி சோரம்தங்கா உறுதி


மிசோரம் சட்டசபை தேர்தல்: மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் - முதல்-மந்திரி சோரம்தங்கா உறுதி
x
தினத்தந்தி 16 Oct 2023 12:34 AM GMT (Updated: 16 Oct 2023 12:54 AM GMT)

மிசோரம் சட்டசபை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்-மந்திரி சோரம்தங்கா தெரிவித்தார்.

அய்ஸ்வால்,

அடுத்த மாதம் சட்டசபை தேர்தலை சந்திக்கும் 5 மாநிலங்களில் மிசோரமும் அடங்கும். அங்கு நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. முதல்-மந்திரி சோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி அங்கு நடந்து வருகிறது. இக்கட்சி, 3 தடவை ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. இந்நிலையில், முதல்-மந்திரி சோரம்தங்கா ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

"சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம். பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்று நம்புகிறோம். மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 25 முதல் 35 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று கருதுகிறேன்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ஒன்றோ, இரண்டோ தொகுதிகளில் வெற்றி பெற்றாலே அதிர்ஷ்டம்தான். அதுவும் இல்லாவிட்டால், பூஜ்யம்தான் கிடைக்கும். பா.ஜனதா, அதிகபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இல்லாவிட்டால், அதற்கும் பூஜ்யம்தான் கிடைக்கும்.

முக்கிய எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம், 10 தொகுதிகளை தாண்டினாலே, அது அதிசயம்தான். ஆகவே, நாங்கள் மீண்டும் ஆட்சி அமைக்க நிறைய வாய்ப்பு உள்ளது. நாங்கள் 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறோம். இருப்பினும், கொரோனா காரணமாக, அவை அதிர்ஷ்டம் இல்லாத காலமாக அமைந்துவிட்டன. பொருளாதாரம் சரிந்து விட்டது. இருப்பினும், எங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு, மாநிலம் முழுவதும் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story