குடிசையில் வசித்து எம்.எல்.ஏ. ஆன தொழிலாளிபதவி ஏற்பு விழாவுக்கு செல்ல பணம் இல்லாமல் தவித்தார்


குடிசையில் வசித்து எம்.எல்.ஏ. ஆன தொழிலாளிபதவி ஏற்பு விழாவுக்கு செல்ல பணம் இல்லாமல் தவித்தார்
x
தினத்தந்தி 9 April 2023 6:45 PM GMT (Updated: 9 April 2023 6:45 PM GMT)

குடிசையில் வசித்து எம்.எல்.ஏ. ஆன தொழிலாளி பதவி ஏற்பு விழாவுக்கு செல்ல பணம் இல்லாமல் தவித்த நிலை ஏற்பட்டது.

பெங்களூரு-

பெலகாவி மாவட்டம் சிக்கோடி-சடலகா சட்டசபை தொகுதி 1957-ம் ஆண்டு உதயமானது. முதல் 2 தேர்தல்களில் பொது தொகுதியாக இருந்த சிக்கோடி-சடலகா, 1967-ம் ஆண்டு தேர்தலில் இருந்து 2004-ம் ஆண்டு தேர்தல் வரை தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விவசாய தொழிலாளி ஹக்யாகோல் தத்து எல்லப்பா பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன வரலாறு உள்ளது. இவர் பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட்டு 32 ஆயிரத்து 663 வாக்குகள் பெற்றதோடு, 2,542 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பீமண்ணனவரை வென்றார்.

ஹக்யாகோல் தத்து எல்லப்பா, குடிசையில் வாழ்ந்ததோடு, இன்னொருவரின் தோட்டத்தில் விவசாய கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தபோது தேர்தலில் முதல் முறையாக கால்பதித்து வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், பெங்களூரு விதான சவுதாவில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு பயண செலவுக்கு அவரிடம் பணம் இல்லை. இதுபற்றி அறிந்த கட்சி பிரமுகர்கள் அவருக்கு பணம் வழங்கி உதவி செய்தனர். அதை பெற்று கொண்டு அவர் பெங்களூரு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று கொண்டார். இருப்பினும், அவர் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததாலும், சிக்கோடி-சடலகா தொகுதி பொது தொகுதியாக மாற்றப்பட்டதாலும் 2008-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை.


Next Story