பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட அறையை மர்ம கும்பல் சேதப்படுத்தியதா...? போலீசார் பதில்


பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட அறையை மர்ம கும்பல் சேதப்படுத்தியதா...? போலீசார் பதில்
x

ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்த வன்முறை சம்பவத்தில் போலீசார் பலர் காயமடைந்தனர்

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள அரசுக்கு சொந்தமான ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி இரவு பணியில் இருந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மறுநாள் அவரது உடல் அரை நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த அந்த இளம் டாக்டருக்கு நேர்ந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் ராய் என்ற சமூக ஆர்வலரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதேநேரம் இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளே உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், எனவே குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் டாக்டர்கள் போராடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர். அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் அரங்கேறிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சி.பி.ஐ.யின் தடயவியல் அதிகாரிகள் குழு ஒன்று டெல்லியில் இருந்து நேற்று சென்றனர். அங்கு பெண் டாக்டரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் மாநிலம் முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நள்ளிரவில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், பதாகைகள் மற்றும் தீப்பந்தம் ஏந்தியும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி டாக்டருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் நேற்று நள்ளிரவில் நடந்த போராட்டத்தில் மர்ம கும்பல் ஒன்று அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு முற்றிலும் சேதமடைந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

நேற்று இரவு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் கற்கள் வீசப்பட்டதை சில புகைப்படங்களில் காண முடிந்தது. அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் நுழைவதைத் தடுக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வெளியே ஒரு பைக் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இரண்டு போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. நேற்று நடந்த வன்முறை சம்பவத்தில் போலீசார் பலர் காயமடைந்தனர்.

இந்த சூழலில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட கருத்தரங்கு அறையை மர்ம கும்பல் நாசப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மர்ம கும்பலால் கருத்தரங்கு அறை நாசம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கொல்கத்தா போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொல்கத்தா போலீசாரின் எக்ஸ் வலைதளத்தில், "குற்றம் நடந்த இடம் கருத்தரங்கு அறையை மர்ம கும்பல் சேதப்படுத்தவில்லை. சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்புவது சமூக விரோத செயல். வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story