பூமியில் சபதம் எடுத்தோம், சந்திரனில் நிறைவேற்றினோம் - பிரதமர் மோடி பெருமிதம்


பூமியில் சபதம் எடுத்தோம், சந்திரனில் நிறைவேற்றினோம் - பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 24 Aug 2023 5:16 AM IST (Updated: 24 Aug 2023 11:12 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா இப்போது நிலவில் இருக்கிறது. பூமியில் சபதம் எடுத்தோம், சந்திரனில் நிறைவேற்றினோம் என்று 'சந்திரயான்-3' வெற்றி குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கருவி, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. 'பிரிக்ஸ்' மாநாட்டுக்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து அக்காட்சியை பார்த்தார்.

லேண்டர், தரை இறங்கியவுடன் அவர் தேசியக்கொடியை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்துகளும் தெரிவித்தார். பின்னர், காணொலி காட்சி மூலமாக விஞ்ஞானிகளிடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

நான் பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோதிலும், என் இதயம் இந்தியாவில்தான் இருக்கிறது.

புதிய இந்தியா

நிலவில் சந்திரயான்-3 தரை இறங்கியது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. வளர்ந்த இந்தியாவுக்கான அடையாளத்தை பறைசாற்றுகிறது. புதிய இந்தியாவின் புதிய எழுச்சியை நாம் கண்டுள்ளோம். புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

இது, நாம் எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கும் தருணம். எந்த நாடும் செல்ல முடியாத நிலவின் தென்துருவத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இந்தியா, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும்போது, இந்த அற்புதமான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சந்திர பாதையில் நடக்கலாம்

இந்தியா இப்போது நிலவில் இருக்கிறது. சந்திர பாதையில் நடக்கும் நேரம் வந்து விட்டது. இந்தியா, பூமியில் சபதம் எடுத்தது, சந்திரனில் நிறைவேற்றி விட்டது.

சந்திரயான்-3 திட்டம், இந்தியாவுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற நமது அணுகுமுறை உலகமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நமது சந்திரயான் திட்டம், மனிதர்களை மையப்படுத்திய அதே அணுகுமுறையை அடிப்படையாக கொண்டது. ஆகவே, இந்த வெற்றி, அனைத்து மனித இனத்துக்கும் சொந்தமானது என்று அவர் பேசினார்.

அமித்ஷா பாராட்டு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.


Next Story