பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி - இன்று உடல் தகனம்
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்-மந்திரியாக இருந்தவர், பிரகாஷ் சிங் பாதல். சிரோமணி அகாலிதளம் கட்சியின் முன்னாள் தலைவரான இவருக்கு கடந்த சில நாட்களாக முதுமை தொடர்பான உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.
இதனால் மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கடந்த 16-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமாகவே தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95.
பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். பிரகாஷ் சிங் பாதல், இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை மற்றும் நமது தேசத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய குறிப்பிடத்தக்க அரசியல்வாதி என்று பிரதமர் கூறியிருந்தார்.
பிரதமர் மோடி அஞ்சலி
மறைந்த பாதலின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சண்டிகாரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு கட்சி தலைவர்களும், சிரோமணி அகாலிதளம் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் முக்கியமாக பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்காக சண்டிகார் சென்ற அவர் சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சில நிமிடங்கள் அங்கே இருந்த அவர், பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பிர் சிங் பாதலின் கரங்களைப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தலைவர்கள் அஞ்சலி
அவருடன் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அரியானா முதல்-மந்திரி மனோகர் சிங் கட்டார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைப்போல அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதலா, பாதல் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, மத்திய மந்திரி சோம் பர்காஷ், அமரீந்தர் சிங் மனைவியும், எம்.பி.யுமான பர்னீத் கவுர் உள்பட பல தலைவர்களும் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சொந்த ஊரில் உடல் தகனம்
இதைத்தொடர்ந்து பிரகாஷ் சிங் பாதலின் உடல் அவரது சொந்த ஊரான முக்த்சாருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று (வியாழக்கிழமை) பிற்பகலில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்-மந்திரியாக இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் இன்பிரகாஷ் சிங் பாதல், பிரதமர் மோடி, அஞ்சலிறு அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
முன்னதாக மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்றும், இன்றும் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசும் அறிவித்தது. இதையொட்டி தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளன.
இதைப்போல பீகார் அரசும் 2 நாள் துக்கம் அனுசரிக்கிறது. பாதல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், அவரது மறைவு சமூக அரசியல் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என கூறியுள்ளார்.
5 முறை முதல்-மந்திரி
பஞ்சாப் அரசியலில் 70 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சிய பிரகாஷ் சிங் பாதல் கடந்த 1927-ம் அண்டு டிசம்பர் 8-ந் தேதி பிறந்தார். கிராம ஊராட்சி தலைவராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர், 1957-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. ஆனார்.
பின்னர் சிரோமணி அகாலிதளம் கட்சியில் இணைந்த அவர், படிப்படியாக அந்த கட்சியின் தலைவராக உயர்ந்தார். 1970-ம் ஆண்டு முதல்-முறையாக மாநில முதல்-மந்திரி ஆனார். இதன் மூலம் மிகவும் இளவயதில் முதல்-மந்திரி ஆன பெருமையை அப்போது பெற்றார்.
பின்னர் 1977-80, 1997-2002, 2007-12, 2012-17 வரை என மேலும் 4 முறை முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார்.
இவ்வாறு பஞ்சாப் அரசியலில் அசைக்க முடியாத தலைவராக இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மரணம், தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.