மோடியின் உத்தரவாதம் என்பது 'வேலையின்மைக்கான உத்தரவாதம்' - பிரியங்கா காந்தி விமர்சனம்


மோடியின் உத்தரவாதம் என்பது வேலையின்மைக்கான உத்தரவாதம் - பிரியங்கா காந்தி விமர்சனம்
x

கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு பிரச்சாரத்தைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

2024-2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை என்றும், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து நிதி மந்திரி ஒரு வார்த்தை கூட பேசாதது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தரும் உத்தரவாதம் என்பது 'வேலையின்மைக்கான உத்தரவாதம்' என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"நமது நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு பிரச்சாரத்தைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

கடந்த ஜூலை 2022-ல் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில், கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி இளைஞர்கள் வேலைக்காக விண்ணப்பித்ததாகவும், ஆனால் 7 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தது. அதாவது சுமார் 21.93 கோடி தகுதியுள்ள இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்று வாக்குறுதி அளித்த பா.ஜ.க. அரசால் ஏற்கனவே உள்ள வேலைகளை வழங்கவோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ முடியவில்லை. தேர்தலில் பிரதமர் உத்தரவாதம் அளிக்கிறார். உண்மையில், அவரது உத்தரவாதம் என்பது 'வேலையின்மைக்கான உத்தரவாதம்' ஆகும்."

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story