சந்தேஷ்காளி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மீது பணமோசடி வழக்கு


சந்தேஷ்காளி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மீது பணமோசடி வழக்கு
x

ஷேக் ஷாஜகான் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுடெல்லி:

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான், சொத்துகளை அபகரித்ததாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரேசன் ஊழல் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஷாஜகான் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். ஷேக் ஷாஜகான் தலைமறைவானார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதன்பிறகே ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அவரை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஷேக் ஷாஜகான் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. அத்துடன் அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேஷ்காளி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஷேக் ஷாஜகானின் உதவியாளர்கள் ஷிபு ஹஸ்ரா, உத்தம் சர்தார் ஆகியோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்களிடம் இருந்து புகார்களை பெறுவதற்காக காவல்துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஷாஜகான் தலைமறைவாக உள்ள நிலையில், சந்தேஷ்காளி சம்பவம் பதட்டத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், ஷாஜகானின் மற்றும் அவரது ஆதரவாளர்களின் செல்வாக்கு மற்றும் அதிகாரம் பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.


Next Story