பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்


பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்
x
தினத்தந்தி 24 Jan 2024 7:27 AM GMT (Updated: 24 Jan 2024 8:07 AM GMT)

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக சரத் பவாரை சந்தித்து ரோகித் பவார் ஆசி பெற்றார்.

மும்பை,

மராட்டிய மாநில கூட்டுறவுத் துறையில் சர்க்கரை ஆலைகளை மோசடியான முறைகளில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி உத்தரவிட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த 5-ந்தேதி மும்பை பாராமதி பகுதியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மருமகன் வழிப் பேரனும், எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவாருக்கு சொந்தமான பாராமதி ஆக்ரோ நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ரோகித் பவாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரோகித் பவார் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று சரத் பவாரிடம் ரோகித் பவார் ஆசி பெற்றார். தொடர்ந்து விதான் பவனுக்குச் சென்ற அவர், சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் பவார், அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறு செய்வேன் எனவும் தெரிவித்தார்.


Next Story