பெங்களூருவில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி


பெங்களூருவில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி
x

பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதியாகி உள்ளதால், அவரது ரத்த மாதிரி பெறப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்

உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 4 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானதால், கர்நாடகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு நபர், கடந்த 4-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு வந்திருந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருடைய கால் மற்றும் கையில் சிறிய அளவிலான கொப்பளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை கமிஷனர் ரன்தீப் உறுதி செய்திருக்கிறார்.

மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

இதையடுத்து, குரங்கு அம்மை அறிகுறி உள்ள ஆப்பிரிக்க நபரின் ரத்த மாதிரி பெறப்பட்டு புனேயில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நபரின் கை மற்றும் தொடை பகுதியில் கொப்பளங்கள் இருப்பதால், குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் புனே ஆய்வு மையத்தில் இருந்து அறிக்கை கிடைத்த பின்பு தான், அதுபற்றி உறுதியாக சொல்ல முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதால், அவருடன் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த சகோதரர், சகோதரியையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதியானால், அது பெங்களூரு நகரவாசிகள் இடையே பீதியை ஏற்படுத்தும்.

தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு உத்தரவு

அதே நேரத்தில் இதுபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு வாலிபர் வந்திருந்தார். அவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரது ரத்த மாதிரி பெறப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வாலிபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று ஆய்வில் தெரியவந்திருந்தது.

தற்போது 2-வது நபராக ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story