மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
Live Updates
- 10 Aug 2023 7:42 PM IST
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
மக்களவையில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல்வாக்கெடுப்பு நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து விட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனையடுத்து மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 10 Aug 2023 7:30 PM IST
2028-ல் எதிர்க்கட்சிகளே முன் தயாரிப்போடு வாருங்கள் - பிரதமர் மோடி அறிவுரை
2018-ம் ஆண்டு நம்பிக்கையிலா தீர்மானத்தில் ஒரு வாய்ப்பு வழங்கினோம். 2018-ல் எதிர்க்கட்சிகள் தவறவிட்ட நிலையில் இந்த முறையும் தவற விட்டு விட்டனர். 2028-ல் எதிர்க்கட்சிகள் தகுந்த முன்னெடுப்போடு வர வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 2026-ம் ஆண்டு எதிர்க்கட்சிகள் தயாராவார்கள் என நம்புகிறேன் என்றார். 2028-ல் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு முன் தயாரிப்புடன் வாருங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
- 10 Aug 2023 7:28 PM IST
கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? பிரதமர் மோடி பதில்
நமக்கு சொந்தமான இடத்தை மற்றொரு நாட்டிற்கு ஒப்படைத்தவர்கள் யார்? இந்திராகாந்தி ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருக்கிறார். இந்திரா காந்தியின் பெயரால் தான் கச்சத்தீவு இன்னொரு நாட்டிற்கு கொடுக்கப்பட்டது என்றார்.
- 10 Aug 2023 7:10 PM IST
2 மணி நேரத்தை கடந்து பிரதமர் மோடி உரை
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி 2 மணி நேரத்தை கடந்தும் உரையாற்றி வருகிறார்.
- 10 Aug 2023 7:00 PM IST
மணிப்பூரில் நிச்சயம் அமைதி திரும்பும் - பிரதமர் மோடி உறுதி
மணிப்பூர் மாநிலத்தில் நிச்சயம் அமைதி திரும்பும் என நான் முழுமையாக நம்புகிறேன். மணிப்பூருடன் நாம் அனைவரும் நிற்கிறோம். விரைவில் அமைதி நிலைநாட்டப்படும்.மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்து வருகின்றன. உயர்நீதிமன்றத்தின் ஒரு உத்தரவு தான் மிகப்பெரிய வன்முறையை தூண்டி விட்டுள்ளது.
மணிப்பூர் குறித்து விரிவான விளக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவே கொடுத்துவிட்டார். மணிப்பூரில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் அமித்ஷா மேற்கொண்டார். மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முழுமையாக முயற்சி செய்கின்றன.
மணிப்பூர் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்திருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் அதற்கு தயாராக இல்லை. மணிப்பூரில் பெண்களுக்கு தீங்கிழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- 10 Aug 2023 6:48 PM IST
மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசாததைக்கண்டித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பிரதமர் மோடி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பேசி வரும் நிலையில் மணிப்பூர் பற்றி பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
- 10 Aug 2023 6:38 PM IST
யார் ராவணன்? பிரதமர் மோடி பதில்
ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏழைத்தாயின் மகனான நான் இப்போது பிரதமராக உள்ளேன்.
அனுமனால் இலங்கை அழிக்கப்படவில்லை, ராவணின் தலைகனத்தால் தான் அழிந்தது என்பது சரி தான். காங்கிரசின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 400-ல் இருந்து 40 ஆக குறைந்ததை இலங்கையுடன் ஒப்பிட வேண்டும். எதிர்க்கட்சிகளின் அகங்காரத்திற்கு 2024-ல் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் . ராகுல்காந்தி 24 மணி நேரமும் என்னையே நினைத்துக்கொண்டிருக்கிறார். பொய் மூட்டைகளின் கடையாகவும் கொள்ளை கூடாரமாகவும் காங்கிரஸ் விளங்குகிறது. காங்கிரசின் கடை விரைவில் இழுத்து மூடப்படும் என்றார்.
- 10 Aug 2023 6:30 PM IST
இந்தியா கூட்டணி அல்ல, ஈகோ கூட்டணி - பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல, ஈகோ கூட்டணி. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உடைய யுபிஏ கூட்டணி இறந்து புதைக்கப்பட்டு விட்டது. யுபிஏ கூட்டணி இறந்ததற்கான இறுதி அஞ்சலி பெங்களூருவில் அனுசரிக்கப்பட்டது. பெங்களூருவில் யுபிஏ கூட்டணிக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது என்றார்.
- 10 Aug 2023 6:15 PM IST
திமுக குறித்து பிரதமர் மோடி விமர்சனம்
தமிழக மண் ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர், அப்துல்கலாம் ஆகியோரை கொடுத்த மண். திமுகவை பொறுத்தவரை தமிழ்நாடு இந்தியாவில் இல்லை போலும்.
- 10 Aug 2023 6:09 PM IST
ஒரு மணி நேரத்தை கடந்து பிரதமர் மோடி பேச்சு
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி ஒரு மணி நேரத்தை கடந்து உரையாற்றி வருகிறார். மக்களவையில் பிரதமர் மோடி பேசி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன.