புதிய நாடாளுமன்ற கட்டிடம் - பிரதமர் மோடி திடீர் விசிட்


புதிய நாடாளுமன்ற கட்டிடம் - பிரதமர் மோடி திடீர் விசிட்
x

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை முன்னறிவிப்பின்றி பிரதமர் மோடி பார்வையிட்டார்.

புதுடெல்லி,

தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. 2020 டிசம்பரில் பிரதமர் மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

ராஜபாதை சீரமைப்பு, பொது மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய வீடு மற்றும் அலுவலகம் மற்றும் துணை ஜனாதிபதிக்கான புதிய வீடு ஆகியவற்றின் புதிய கட்டுமானங்களின் ஒரு பகுதியாக நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் புதிய பார்லிமென்ட்டை உருவாக்குகிறது.

இந்தியாவின் ஜனநாயகப் பெருமையைப் பறைசாற்றும் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், சாப்பாட்டுப் பகுதி மற்றும் விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை இதில் அடங்கும். கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திடீரென சென்று பணிகளை ஆய்வு செய்தார். மேலும், அங்கு நடக்கும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து, அங்கிருந்த ஊழியர்களிடம் உரையாடினார். அங்கு பிரதமர் மோடி சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார். மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள வசதிகளை பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். நாடாளுமன்ற கட்டிடத்தின் இரு அவைகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.


Next Story