நடிகர் சுதீப் பிரசாரம் செய்த பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வி


நடிகர் சுதீப் பிரசாரம் செய்த பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வி
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்திருந்தார். அவர் பிரசாரம் செய்த பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வியை தழுவி உள்ளனர்.

பெங்களூரு:-

நடிகர் சுதீப் பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதீப் பிரசாரம் செய்தார். பசவராஜ் பொம்மை தன்னுடைய மாமா என்றும், அவர் கேட்டுக் கொண்டதாலும், தான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவி செய்தார் என்றும் சுதீப் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதியில் பசவராஜ் பொம்மை வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போதும், அதன்பிறகு அந்த தொகுதியிலும் நடிகர் சுதீப் பிரசாரம் செய்திருந்தார். அதன்பிறகு, மந்திரிகளாக இருந்த சுதாகர், சோமண்ணா, பி.சி.பட்டீல் உள்ளிட்ட பல்வேறு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்திருந்தார்.

பசவராஜ் பொம்மை வெற்றி

-ஒவ்வொரு தொகுதியிலும் திறந்த வாகனத்தில் பா.ஜனதா வேட்பாளருடன் சென்று நடிகர் சுதீப் வாக்கு சேகரித்திருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்களும், ரசிகர்களும் திரண்டு வந்திருந்தனர். சில இடங்களில் தடியடியும் நடந்திருந்தது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு நடிகர் சுதீப் பிரசாரம் செய்ததில் பா.ஜனதாவின் பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். அவர்களில் மந்திரிகளாக இருந்த சுதாகர், சோமண்ணா, பி.சி.பட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். சிக்காவி தொகுதியில் பசவராஜ் பொம்மையும், பெங்களூரு தொட்டபள்ளாப்புரா தொகுதியில் நீரஜ் முனிராஜும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.


Next Story