சமூக வலைதளம் மூலம் மலர்ந்த காதல்: 2கே கிட்ஸ்க்கே டப் கொடுத்த 80 வயது தாத்தா - 34 வயது பெண்ணை கரம் பிடித்தார்


சமூக வலைதளம் மூலம் மலர்ந்த காதல்: 2கே கிட்ஸ்க்கே டப் கொடுத்த 80 வயது தாத்தா - 34 வயது பெண்ணை கரம் பிடித்தார்
x

சமூக வலைதளம் மூலம் உருவான காதலால் 34 வயது பெண்ணை 80 வயது தாத்தா ஒருவர் திருமணம் செய்துள்ளார்.

போபால்,

படித்தவர்கள், பாமரர்கள், நகர்ப்புறத்தினர், கிராமப்புறத்தினர், ஏழைகள், பணக்காரர்கள், இளையோர், முதியோர் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தரப்பினரையும் கையடக்கக் கருவியான ஸ்மார்ட்போன் ஆட்கொண்டு விட்டது என்றால் மிகையல்ல.

தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை. சில நேரங்களில் ஸ்மார்ட்போன்தான் நம்மை பயன்படுத்துகிறது என்றே சொல்லலாம். முகநூல், இன்ஸ்டா, வாட்ஸ் அப், திரட் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பெரும்பாலானோர் சர்வசாதாரணமாக ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வருகின்றனர். 2கே கிட்ஸ் சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாவை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் அதன்மூலம் ஏற்பட்ட காதலால் நடைபெற்ற திருமணம்தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் 34 வயது பெண்ணை 80 வயது தாத்தா ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம், அகர் மாவட்டத்தின் மகாரியா கிராமத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் பலுராம் பக்கிரி. அதேபோல, மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்த 34 வயதான பெண் ஷீலா இங்கிள்.

இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். பின்பு, இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தற்போது, திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.மேலும் இந்த திருமணமானது இணையவாசிகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story