ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றம்; 31-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு திறப்பு


ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றம்; 31-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு திறப்பு
x

ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் (முகல் கார்டன்), அமிர்த தோட்டம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இந்த தோட்டம் வருகிற 31-ந்தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

'அமிர்த தோட்டம்'

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட தோட்டம் உள்ளது. அழகு நிறைந்த துலிப் மலர்கள் உள்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும் இந்த தோட்டம் முகலாய தோட்டம் (முகல் கார்டன்) என அழைக்கப்பட்டு வந்தது. புகழ்பெற்ற இந்த தோட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி 'அமிர்த தோட்டம்' (அம்ரித் உத்யன்) என இந்த தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

பொது பெயர்

இது தொடர்பாக ஜனாதிபதிக்கான துணை ஊடக செயலாளர் நவிகா குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், '75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமிர்த பெருவிழாவாக நடைபெற்று வரும் இந்த தருணத்தில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள தோட்டத்துக்கு அம்ரித் உத்யன் (அமிர்த தோட்டம்) என்ற பொது பெயரை ஜனாதிபதி சூட்டியுள்ளார்' என குறிப்பிட்டு இருந்தார்.

ஜனாதிபதி மாளிகையின் இந்த ரம்மியமான தோட்டம் ஆண்டுதோறும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் வருகிற 31-ந்தேதி முதல் இந்த தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தோட்டத்தை மார்ச் 26-ந்தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும், அனைத்து திங்கட்கிழமை மற்றும் மார்ச் 8-ந்தேதி (ஹோலி பண்டிகை) ஆகிய நாட்களில் திறக்கப்படாது எனவும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

துலிப் மலர்கள்

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தில் பல்வேறு வகையான மலர்களுடன், தனித்துவம் வாய்ந்த 12 வகையான துலிப் மலர்களையும் இந்த ஆண்டு பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்து வருகிறது. இதில் முக்கியமாக ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதைக்கு கடமை பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் ஜனாதிபதி மாளிகை தோட்டத்துக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதா வரவேற்பு

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை பா.ஜனதா வரவேற்று உள்ளது. அடிமை மனநிலையில் இருந்து வெளியே வருவதற்காக, மோடி அரசின் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு இது என கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் இந்த நடவடிக்கைைய குறை கூறியுள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ.பிரையன் கூறுகையில், 'யாருக்குத் தெரியும். அவர்கள் ஈடன் கார்டன் பெயரையும், மோடி கார்டன் என்று அழைக்க விரும்பலாம். ஆனால் இதற்கு பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ ஆகியவற்றின் விலைமதிப்பற்ற வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்' என தெரிவித்தார்.

இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகள் நீண்ட காலமாக நடந்து வருவதாக கூறிய இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, இது எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது என்றும் தெரிவித்து உள்ளார்.


Next Story