பாரம்பரிய முறைப்படி நடந்த முகேஷ் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்தம்...!


உறவினர்கள் ஆசிர்வாதத்தை பெறும் வகையில் முகேஷ் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்த சடங்கு பாரம்பரிய முறைப்படி நடந்தது.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரன் மெர்ச்சண்ட் - ஷைலா தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிச்சயதார்த்தத்தின் முக்கிய சடங்கான ரோகா விழா நடந்துள்ளது.

திருமணத்தில் இணையவுள்ள தம்பதி, முன்னதாக குடும்பத்தினர், நண்பர்களின் பூரண ஆசிர்வாதத்தை பெறுவதற்கான பாரம்பரிய நடைமுறையாக இது பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இந்த சடங்கு நேற்று நடந்தது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

ஆனந்த் மற்றும் ராதிகா ஒருவரையொருவர் நன்றாக அறிந்தவர்கள். வாழ்க்கை பயணத்தில் விரைவில் ஒன்று சேரவுள்ள இவர்கள், தங்கள் ஒற்றுமைப் பயணத்தை தொடங்கும் முன்னதாக குடும்பத்தினர், உறவினர்களின் பூரண ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். ஆனந்த் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ரிலையன்ஸ், ஜியோ பிளாட்பார்ம்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீ-டெய்ல் வென்ச்சர்ஸ் உள்ளிட்டன நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்திருக்கும் இவர், தற்போது RIL என்ற எரிசக்தி வணிகத்தை நடத்தி வருகிறார். ராதிகா மெர்ச்சண்ட், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தற்போது அவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றுகிறார்.


Next Story