32 ஆண்டு கால கொலை வழக்கில் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை; கோர்ட்டு உத்தரவு


32 ஆண்டு கால கொலை வழக்கில் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை; கோர்ட்டு உத்தரவு
x

காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராயின் கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பின் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

லக்னோ,

காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந்தேதி அவரது இளைய சகோதரர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அஜய் ராய் என்பவரின் வீட்டின் முன் நின்று கொண்டு இருந்தபோது சுட்டு கொல்லப்பட்டார்.

இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த எப்.ஐ.ஆர். பதிவில், முக்தார் அன்சாரி, அவரது உதவியாளர் பீம்சிங் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் கலீம் ஆகியோரது பெயரை அஜய் ராய் குறிப்பிட்டார்.

நில அபகரிப்பு, மிரட்டல் மற்றும் கொலை உள்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அன்சாரி, கடந்த 2005-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏறக்குறைய 2 தசாப்தங்களாக சிறையில் இருந்து வருகிறார். ராய் படுகொலை வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வாரணாசியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கான கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த மே 19-ந்தேதி விசாரணை முடிந்தது.

அவருக்கு எதிரான 2 நேரடி சாட்சிகள் கோர்ட்டில் சாட்சியம் அளித்தது, வழக்கை வலு பெற செய்தது. இந்த வழக்கில் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுபற்றி அஜய் ராய் கூறும்போது, வழக்கில் சாட்சிகளை கலைக்க மற்றும் கொலை செய்ய அன்சாரி முயன்றபோதும், நீதி துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது என கூறியுள்ளார்.

32 ஆண்டு கால போரில் நாங்கள் இன்று வெற்றி பெற்றுள்ளோம். கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம். எனக்கு ஏதேனும் சம்பவம் நடைபெற்றால், அதற்கு பா.ஜ.க. அரசே பொறுப்பு என அவர் கூறியுள்ளார்.


Next Story