மும்பை: மரைன் டிரைவ் கடற்கரையில் 10 அடி உயரத்திற்கு எழும்பிய அலை


மும்பை:  மரைன் டிரைவ் கடற்கரையில் 10 அடி உயரத்திற்கு எழும்பிய அலை
x

மும்பையில் மழை பொழிவை முன்னிட்டு மரைன் டிரைவ் கடற்கரை பகுதிகளில் 10 அடி உயரத்திற்கும் கூடுதலாக அலை மேலெழும்பி, வீசி சென்றது.

புனே,

மராட்டியத்தில் கடந்த 2 வாரத்திற்கு பின் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. மாநிலத்தில் மும்பை, புனே, ராய்காட், சிந்துதுர்க் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இதில் நேற்று சிந்துதுர்க், தெற்கு கொங்கன் பகுதியில் பலத்த மழை பெய்தது. மராட்டியத்தில் சிந்துதுர்க், தெற்கு கொங்கனில் பெய்த பலத்த மழை காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கட்சிரோலி, சந்திராப்பூர், கோண்டியா, நாக்பூர், வார்தா ஆகிய மாவட்டங்களில் இன்றும், பண்டாரா, அகோலா, புல்தானா, வாசிம், அமராவதி, யவத்மால் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இந்நிலையில், மும்பை, நவி மும்பை, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று காலை வரை மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கனமழையும் பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனை முன்னிட்டு மும்பை மற்றும் தானே மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த சூழலில், மும்பையில் மழை பொழிவை முன்னிட்டு மரைன் டிரைவ் கடற்கரை பகுதிகளில் 10 அடி உயரத்திற்கும் கூடுதலாக அலை மேலெழும்பி வீசி சென்றது. இதனால், கடற்கரை பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.





Next Story