நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு மும்பையில் தடை உத்தரவு


நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு மும்பையில் தடை உத்தரவு
x

மும்பையில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. .

ரகசிய தகவல்

மும்பை போலீசார் நேற்று வெளியிட்ட திடீர் உத்தரவில், நவம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், சட்டவிரோத ஊர்வலங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம், சட்டம் ஒழுங்கு சீர்குலையலாம், மனித உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தடைக்கு விலக்கு

மராட்டிய போலீஸ் சட்டத்தின் படி நவம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், சட்டவிரோத ஊர்வலங்கள், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துதல், பேண்டு வாத்தியங்கள் இசைத்தல், பட்டாசு வெடித்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

இருப்பினும் திருமண நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகள், கிளப்புகள், நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் திரையரங்குகள் அகியவற்றிற்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் அமைதி மற்றும் பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டு நவம்பர் 3-ந் தேதி முதல் டிசம்பர் 2-ந் தேதி வரை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றை பொது வெளியில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

கடும் நடவடிக்கை

சமூக ஒழுங்கிற்கு கேடு ஏற்படுத்த கூடிய, பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்க கூடிய அரசுக்கு எதிரான படங்கள், அடையாளங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பலகைகளை உருவாக்கவும், காட்சி படுத்தவும் மற்றும் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஆத்திரமூட்டக்கூடிய சொற்கள், பாடல்கள் மற்றும் இசையை பொதுவெளியில் பயன்படுத்த கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story