மும்பையில் மழை வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி


மும்பையில் மழை வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி
x

மும்பையில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதில் 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்கள்.

மும்பையில் வழக்கமாக ஜூன் 2-வது வாரத்தில் பருவ மழைக்காலம் தொடங்கும்.

பலத்த மழை

நடப்பு ஆண்டு பருவமழை தாமதமாகி வந்தது. நேற்று முன்தினம் வரை மழை பெய்யவில்லை. மேலும் நகரில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று முதல் 2 நாட்களுக்கு நகரில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் நேற்று நகரில் திடீரென பலத்த மழை பெய்தது. குறிப்பாக காலை நேரத்திலும், மாலையிலும் மழை கொட்டி தீர்த்தது.

வெள்ளம்

மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. அந்தேரி தகிசர் உள்ளிட்ட சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கிங் சர்க்கிள் காந்தி மார்க்கெட் பகுதியிலும் தண்ணீர் தேங்கியது. சாக்கி நாக்கா, பாண்டுப், குர்லா, ஒர்லி கடல் பாலம் அருகே உள்ள கபர் கான் ரோடு, அசல்பா, தாதர் டி.டி., திலக்நகர், தகிசர் சப்வே உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததை காண முடிந்தது. நகரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று திடீரென பெய்த பலத்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

2 தொழிலாளர்கள் பலி

இதற்கிடையே நேற்று மாலை 4.30 மணியளவில் கோவண்டி, சிவாஜிநகர் 90 அடி சாலை பகுதியில் 2 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் தவறி பாதாள சாக்கடைக்குள் விழுந்தனர். வெள்ளம் அவர்களை அடித்து சென்றது. அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் சாக்கடையில் விழுந்த 2 பேரையும் மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் 2 பேரும் ஏற்கனவே பலியானது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தனியார் ஒப்பந்த தொழிலாளர் ராம்கிருஷ்ணா (25), சுதீர் தாஸ் (30) என்பது தெரியவந்தது.

மேலும் மும்பையில் 11 மரங்கள் சாய்ந்து விழுந்தன. 7 இடங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

மும்பை தவிர தானே, நவிமும்பை, வசாய்-விரார் பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது.


Next Story