தனியார் நிறுவன ஊழியர் கொலை
சிவமொக்காவில் தனியார் நிறுவன ஊழியர் படுகொலை செய்யப்பட்டார்.
சிவமொக்கா:
சிவமொக்கா மாவட்டம் ஜெயநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட மெத்தனஹள்ளி பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் ஜெயநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் ஜெயநகரை சேர்ந்த விஜய்(வயது 37) என்று தெரியவந்தது. பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினீயராக இருந்த இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்தார். ஜெயநகர் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த இவரை யாரோ பேசவேண்டும் என்று செல்போனில் அழைத்துள்ளனர். அந்த அழைப்பை ஏற்று விஜய் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் செல்போனில் அழைத்த கும்பலே விஜயை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.