காங்கிரஸ் பிரமுகர் படுகொலை; 2 பேர் கைது
சிட்லகட்டாவில் காங்கிரஸ் பிரமுகர் படுகொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையாளியின் உறவினர் வீடு சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்பள்ளாப்பூர்:
சிட்லகட்டாவில் காங்கிரஸ் பிரமுகர் படுகொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையாளியின் உறவினர் வீடு சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் பிரமுகர் கொலை
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா பைரகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. காங்கிரஸ் பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக சிட்லகட்டாவுக்கு சென்றுவிட்டு இரவு 7.40 மணி அளவில் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, கிராமத்தின் வெளிப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்து நாராயணசாமி செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரது கண்ணில் உப்பை தூவினர். அதனால் கண் எரிச்சலால் அவதிப்பட்ட நாராயணசாமியை மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
2 பேர் கைது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிட்லகட்டா போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முன்விேராதம் காரணமாக அவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில், அவரை கொலை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சாடஹள்ளியை சேர்ந்த பிரமோத், அவரது கூட்டாளி வேணு ஆகியோர் என்பது தெரியவந்தது.
விசாரணையில், நாராயணசாமியின் உறவினர் தேவராஜின் மனைவி, பிரமோத்தின் ேதாட்டத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் சிறிது நாட்கள் மஞ்சுளா வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால், பிரமோத், மஞ்சுளாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த நாராயணசாமி, பிரமோத்தை எச்சரித்ததுடன், அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் பிரமோத் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.
வீடு சூறை
இதற்கிடையே கொலையாளி பிரமோத்தின் உறவினரான மஞ்சுநாத் என்பவரின் வீடு பைரகனஹள்ளி கிராமத்தில் உள்ளது. அந்த வீட்டை நாராயணசாமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கல்வீசி தாக்கி சூறையாடினர். இதனால் வீட்டில் கண்ணாடி உடைந்ததுடன், பொருட்கள் சேதமடைந்தது. இதனால் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து சிட்லகட்டா போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.