மண்டியாவில் 3 பெண்கள் கொலையில் தம்பதி கைது


மண்டியாவில் 3 பெண்கள் கொலையில் தம்பதி கைது
x

மண்டியாவில், 3 பெண்கள் கொலை வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். நகை-பணத்திற்காக, பெண்களை குறித்துவைத்து தீர்த்து கட்டியது அம்பலமானது.

மண்டியா:

மண்டியாவில், 3 பெண்கள் கொலை வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். நகை-பணத்திற்காக, பெண்களை குறித்துவைத்து தீர்த்து கட்டியது அம்பலமானது.

இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு மண்டல ஐ.ஜி.பிரவீன் மதுகர் பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2 பெண்கள் கொலை

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே பேபி கிராமம் கெரேகொடி அருகே உள்ள ஏரியில் பெண்ணின் பிணம் ஒன்று மிதந்தது. அதாவது பெண்ணின் இடுப்புக்கு கீழ் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் மிதந்தது.

அதேபோல் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா அரகெரே அருகே மதரஹள்ளி சாலையோரம் முட்புதரில் பெண் ஒருவரின் பிணமும் அரை உடலுடன் மீட்கப்பட்டது. இந்த 2 பெண்களின் உடலும் கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதி கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலைகள் குறித்து பாண்டவபுரா, அரகெரே போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துகொண்டனர். போலீசாரின் விசாரணையில், 2 பெண்களும் கொலை செய்யப்பட்டு உடல் வெட்டி வீசப்பட்டது தெரியவந்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் கொலையான பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டது.

தம்பதி கைது

அதில் ஒரு பெண், சாம்ராஜ்நகரில் மாயமானதாக தேடப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண், செல்போனில் கடைசியாக பேசிய நபர்களின் செல்போன் எண் எடுக்கப்பட்டு அதன் சிக்னல் கண்டறியப்பட்டது. செல்போனின் சிக்னலை வைத்து துமகூரு டபஸ் நகரில் இருந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேமடைந்த போலீசார், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், சாம்ராஜ்நகரில் மாயமானதாக தேடப்பட்ட பெண் உள்பட 2 பேரை கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து மண்டியாவுக்கு அழைத்து சென்று மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது கைதானவர்கள் பெங்களூருவை சேர்ந்த சித்தலிங்கப்பா(வயது 35) என்பதும், அவரது மனைவி சந்திரகலா(32) என்பதும் தெரியவந்தது.

நகை-பணத்திற்காக...

இந்த தம்பதி, ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக இளம்பெண்களை குறிவைத்து அவர்களிடம் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை, நர்சிங் வேலை இருப்பதாக கூறி ஏமாற்றி தனியாக அழைத்து சென்று அவர்களை கொன்று நகை-பணத்தை பறித்து உடலை வேறு பகுதியில் வீசி வந்துள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று மைசூருவில் உள்ள மேட்டுகள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வாடகை வீட்டில் கொலையான 2 பெண்களை வரவழைத்து கொன்று உடலை 2 துண்டாக வெட்டி இருசக்கர வாகனங்களில் வைத்து கால்வாய்களில் வீசியது தெரியவந்தது. இதுவரை 3 பெண்களை கொலை செய்துள்ளனர். மேலும் 5 பெண்களை கொல்ல திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கண்டுப்பிடித்த போலீசாருக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story