வீடு புகுந்து நகைக்கடை உரிமையாளரின் மனைவியை கொன்று நகை, பணம் கொள்ளை


வீடு புகுந்து நகைக்கடை உரிமையாளரின் மனைவியை கொன்று நகை, பணம் கொள்ளை
x

ஹாசன் டவுனில், பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்கடை உரிமையாளரின் மனைவியை கத்தியால் குத்திக்கொன்று ரூ.14 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஹாசன்:

ஹாசன் டவுனில், பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்கடை உரிமையாளரின் மனைவியை கத்தியால் குத்திக்கொன்று ரூ.14 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

நகைக்கடை உரிமையாளர்

ஹாசன் (மாவட்டம்) டவுன் படாவனே பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி மஞ்சுளா(வயது 42). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். குமார், ஹாசன் டவுனில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். தினமும் காலையில் அவர் கடைக்கு சென்றுவிட்டு, மதியம் சாப்பிட வருவது வழக்கம். அதேபோல் பிள்ளைகளும் தினமும் காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவார்கள். இதனால் மஞ்சுளா வீட்டில் தனியாக இருப்பார்.

அதேபோல் நேற்று காலையிலும் குமார் கடைக்கு சென்றுவிட்டார். பிள்ளைகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் மஞ்சுளா மட்டும் தனியாக இருந்தார்.

முகமூடி அணிந்த நபர்கள்

இந்த சந்தர்ப்பத்தில் 2 வாலிபர்கள் முகமூடி அணிந்தபடி ஒரே மோட்டார் சைக்கிளில் மஞ்சுளாவின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை பலமாக தட்டினார்கள். இதையடுத்து மஞ்சுளா கதவை திறந்தார். அப்போது அந்த 2 மர்ம நபர்களும், அதிரடியாக உள்ளே புகுந்து மஞ்சுளாவை கத்தி முனையில் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடமிருந்து பீரோ சாவியை பறித்தனர். அதையடுத்து பீரோவில் இருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டனர்.

மேலும் அவர்கள் மஞ்சுளாவையும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றுவிட்டனர்.

நகை, பணம் கொள்ளை

இந்த நிலையில் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த குமார், வீட்டில் மஞ்சுளா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். மேலும் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணம், மஞ்சுளா அணிந்திருந்த நகைகள் ஆகியவை காணாமல் போயிருந்தது. அப்போதுதான் யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து மஞ்சுளாவை கொலை செய்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றது குமாருக்கு தெரியவந்தது. பின்னர் இதுபற்றி அவர் பென்சன் மொகல்லா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை, கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story