ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி 'ஜனநாயக படுகொலை' - உத்தவ் தாக்கரே கடும் தாக்கு...!


ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி ஜனநாயக படுகொலை - உத்தவ் தாக்கரே கடும் தாக்கு...!
x

சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விளக்கிக்கொண்டனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.

பின்னர், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே மராட்டிய முதல்-மந்திரியானார்.

அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார். உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.

இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, உத்தவ் தாக்கரே அணி சிவசேனா உத்தவ் பாலாசாகிப் தாக்கரே அணி என்ற பெயரையும், தீ பந்தம் சின்னத்தையும் வைத்துக்கொள்லாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர உள்ளதாக உத்தவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், சிவசேனா சின்னத்தை திருடிவிட்டனர். நாங்கள் போராடுவோம். நம்பிக்கையை இழக்கவேண்டாம். தனது திருட்டால் இப்போதைக்கு ஷிண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒருமுறை துரோகி என்றால், எப்போதுமே துரோகி தான். ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியும், சின்னமும் வழங்கப்பட்டது ஜனநாயக படுகொலை' என்றார்.


Next Story