இந்த பிரச்சினையை வீழ்த்திவிடலாம்; உத்தவ் தாக்கரே தலைமையில் அரசு தொடரும் - சரத் பவார்


இந்த பிரச்சினையை வீழ்த்திவிடலாம்; உத்தவ் தாக்கரே தலைமையில் அரசு தொடரும் - சரத் பவார்
x

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை ஆதரிக்க மகாவிகாஸ் அகாடி கூட்டணி முடிவு செய்துள்ளது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதில், 33 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசியல் குழப்பத்தால் மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், மகாவிகாஸ் அகாடியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாவிகாஸ் அகாடி கூட்டணி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மும்பை திரும்பி வந்ததும் நிலைமை மாறும் என நான் நம்புகிறேன்.

அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு குஜராத்தில் இருந்து அசாம் கொண்டு செல்லப்பட்டனர் என அனைவருக்கு தெரியும். இதற்கு உதவி செய்தவர்களின் பெயர்களை வெளியிட நாங்கள் விரும்பவில்லை. அசாம் அரசு இவர்களுக்கு உதவுகிறது. இது தவிர நான் எந்த பெயரையும் கூற விரும்பவில்லை.

மராட்டியத்தில் இதுபோன்ற சூழ்நிலையை பல முறை நாம் பார்த்துள்ளோம். இந்த பிரச்சினையை வீழ்த்திவிடலாம் என நான் எனது அனுபவத்தில் கூறுகிறேன். உத்தவ் தாக்கரேவின் தலைமையில் மராட்டிய அரசு சுமூகமாக செயல்படும்.

மராட்டிய அரசு சிறுபான்மையோ அல்லது அது சட்டப்பேரவையில் நிறுவப்படவில்லையோ. அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும்போது இந்த அரசு பெரும்பான்மையில் உள்ளது என்பதை நிரூபிக்கும்' என்றார்.


Next Story