மைசூரு மாநில 5-வது சட்டசபை தேர்தல் - ஒரு கண்ணோட்டம்
கர்நாடகத்தில் 1971-ம் ஆண்டு மார்ச் 19-ந்தேதி முதல் 1972-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி வரை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. அதன் பிறகு 5-வது சட்டசபைக்கான தேர்தல் 1972-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நடந்தது. இதில் 185 பொது தொகுதிகளும், 29 ஆதிதிராவிடர் தொகுதிகளும், 2 பழங்குடியின தொகுதிகளும் என மொத்தம் 216 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதால் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்) என இரு அணிகள் களமிறங்கின.
இந்த தேர்தலில் 77 லட்சத்து 28 ஆயிரத்து 647 ஆண் வாக்காளர்களும், 73 லட்சத்து 55 ஆயிரத்து 741 பெண் வாக்காளர்களும் என மொத்தம் ஒரு கோடியே 50 லட்சத்து 84 ஆயிரத்து 388 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தேர்தலில் மொத்தம் 61.57 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. அதாவது, 51 லட்சத்து 2 ஆயிரத்து 748 ஆண் வாக்காளர்களும், 41 லட்சத்து 84 ஆயிரத்து 91 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 92 லட்சத்து 86 ஆயிரத்து 839 பேர் வாக்களித்திருந்தனர்.
இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 212 தொகுதிகளிலும், இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்) 176 தொகுதிகளிலும், பாரதீய ஜனசங்கம் 102 தொகுதிகளிலும், சம்யுக்தா சமூகநீதிக்கட்சி 29 தொகுதிகளிலும், சுதந்திரா கட்சி 28 தொகுதிகளிலும், ஜனதா கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 17 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மேலும் சுயேச்சை 250 பேரும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 165 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்) கட்சி 24 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சம்யுக்தா சமூகநீதிக்கட்சி ஆகியவை தலா 3 இடங்களிலும், ஜனதா கட்சி ஒரு இடத்திலும் வெற்றி வாகை சூடின. சுயேச்சைகள் 20 இடங்களில் வெற்றி பெற்றனர்.
கர்நாடக சட்டசபையின் 8-வது முதல்-மந்திரியாக டி.தேவராஜ் அர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் 1972-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி அன்று முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். 1973-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி மைசூரு மாநிலத்தின் பெயரை தேவராஜ் அர்ஸ் கர்நாடக மாநிலம் என பெயர் சூட்டினார். மேலும் ஆதிதிராவிடர், சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. இதனால் அவரது தனது ஆட்சி காலம் முடிவடைவதற்கு முன்னதாக மந்திரிசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டார். இதனால் அவர் 1977-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலுக்கு தயாரானார். அதாவது 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவரது ஆட்சி காலம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கர்நாடக சட்டசபையின் முதல் தேர்தல் முதல் 4-வது தேர்தல் வரை யாரும் நிரந்தரமாக முதல்-மந்திரி பொறுப்பு வகிக்காமல் இருந்தனர். அந்த குறையை போக்கிய பெருமை தேவராஜ் அர்சையே சாரும். அவர் 4 ஆண்டுகள் 9 மாதங்கள் பதவி வகித்துள்ளார்.