கேரள இளம்பெண் ஐ.எஸ் அமைப்புக்கு ரூ.3.5 லட்சத்துக்கு பாலியல் அடிமையாக விற்பனை...?


கேரள இளம்பெண் ஐ.எஸ் அமைப்புக்கு ரூ.3.5 லட்சத்துக்கு பாலியல் அடிமையாக விற்பனை...?
x

கேரள இளம்பெண் ஐ.எஸ் அமைப்புக்கு ரூ.3.5 லட்சத்துக்கு பாலியல் அடிமையாக விற்பனை...? சரணடைந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒன்று அதிக சம்பள ஆசைகாட்டி பெண்களை அரபு தேசங்களுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

டெய்லரிங், நர்சிங் உள்ளிட்ட வேலைகளுக்கு என அழைத்துச் சென்று அவர்களை வீட்டு வேலை செய்ய அடிமைகளாக விற்பனைசெய்த கொடுமை தற்போது அம்பலமாகியிருக்கிறது. மேலும், சுமார் நூறு பெண்களை சிரியா கொண்டுசென்று ஐ.எஸ் அமைப்பினருக்கு பாலியல் அடிமைகளாக விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது சம்பந்தமாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கேரள போலீசும் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்த விசாரணையில் கண்ணூரைச் சேர்ந்த மஜீத், பத்தணம்திட்டாவைச் சேர்ந்த அஜுமோன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்திருக்கிறது.

மஜீத் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிலையில், அஜுமோன் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கிடைக்காததால் எர்ணாகுளம் சவுத் போலீசில் நேற்று சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அஜுமோன்மீது ஆள் கடத்தல் பிரிவான ஐ.பி.சி 370 படி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

துபாய், குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய அமைப்புகள் மூலம் 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தநிலையில் கேரளாவுக்கு திரும்பிய கொச்சியை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் கொச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வளைகுடா நாடுகளுக்கு அடிமை வேலைக்கு விற்கப்படும் பெண்களில் சிலரை சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சப்ளை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது அடிமை வேலைக்கு மறுக்கும் பெண்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த இளம்பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவலும் வெளியானது. எத்தனை பெண்கள் இவ்வாறு சப்ளை செய்யப்பட்டு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

புகார் அளித்த இளம் பெண்ணை முதலில் துபாய்க்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து குவைத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். குவைத்தில் மாமா என அழைக்கப்படும் பெண் ஒருவர் இந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார்.


Next Story