ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிகாரிகள் பாரபட்சம் தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி புகார்
நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சிகளுக்கு இடையே போட்டி வலுத்து வருகிறது. சில மோதல் சம்பவங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் அங்கு தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.
அதுகுறித்து அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் கூறுகையில், 'இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே முறையாக செயல்படவில்லை. அவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பது தடுக்கப்படவில்லை. இதுபற்றி கடந்த 18-ந் தேதி மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் மீது நடவடிக்கை இல்லாததால் தற்போது டெல்லியில் மனு அளித்துள்ளோம். நாம் தமிழர் கட்சியினர் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பான ஊடக காட்சிகளை சாட்சிகளாக எடுக்க வேண்டும் எனவும் கேட்டு இருக்கிறோம். சீமான் தவறு செய்திருந்தால் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதேநேரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய பேச்சுகளுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.