பயணிகளுக்கு நவராத்திரி விரத சாப்பாடு - இந்திய ரெயில்வே சிறப்பு நடவடிக்கை


பயணிகளுக்கு நவராத்திரி விரத சாப்பாடு - இந்திய ரெயில்வே சிறப்பு நடவடிக்கை
x

கிழக்கு ரெயில்வே பகுதியில் உள்ள 400 ரெயில்வே நிலையங்களை கடக்கும் பயணிகள், இந்த மெனுக்களை ரெயிலில் இருந்து கொண்டே ஆர்டர் செய்யலாம்.

புதுடெல்லி,

ஆன்மீகத்தையும், சுற்றுலாவையும் இணைக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய ரெயில்வே, கடந்த ஆண்டு ரெயில் பயணிகளுக்காக நவராத்திரி சிறப்பு உணவுகளை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக வட மாநிலங்களில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்பதால், இந்திய ரெயில்வேயின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு கூடுதல் உணவு வகைகளுடன் நவராத்திரி சிறப்பு மெனுவை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. கிழக்கு ரெயில்வே பகுதியில் உள்ள 400 ரெயில்வே நிலையங்களை கடக்கும் ரெயில்வே பயணிகள், இந்த மெனுக்களை ரெயிலில் இருந்து கொண்டே உண்டு மகிழலாம்.

உணவை ஆர்டர் செய்வதற்கு food on track என்ற செயலிலி மூலமாகவோ அல்லது இந்திய ரெயில்வே இணையதளம் மூலமாகவோ அல்லது 1323 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ தங்கள் ஆர்டர்களை தெரிவித்தால், பயணிகள் இருக்கும் ரெயில் பெட்டிக்கே அவர்களது உணவு வந்து சேர்ந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சாதாரண உப்பிற்கு பதிலாக இந்துப்பில் செய்த உணவு வழங்கப்படும். அதோடு வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் விரத சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு அதுவும் தயார் செய்து கொடுக்கப்படும்.

இதில் ஆலூ சாப் எனப்படும் உருளைக்கிழங்கு போண்டா, ஜவ்வரிசி கட்லெட், முந்திரி மற்றும் தயிரால் தயாரிக்கப்படும் பன்னீர் மக்மாலி, கோஃப்தா கறி, பராத்தாக்கள், ஜவ்வரிசி டிக்கி, ஜவ்வரிசி கிச்சடி, அடை பாயாசம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இது மட்டுமல்லாது அசைவ உணவுப் பிரியர்களுக்காக சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட வகை வகையான காரசார உணவுகளும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன். குறிப்பாக பெங்காலி வகை உணவுகளான கொல்கத்தா பிரியாணி, கொல்கத்தா மீன் வறுவல், ரசகுல்லா, ஆடு, சிக்கன், மீன் சாப்பாடு என அனைத்து வகையான உணவு வகைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விலையாக ரூ.99 முதல் கிடைக்கும் இந்த நவராத்திரி சிறப்பு உணவுகளை செப்டம்பர் 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story