சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் கமாண்டர் சடலமாக கண்டெடுப்பு..!
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் ரூ.8 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் கமாண்டர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தண்டேவாடா,
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டம் புசரஸ் பள்ளத்தாக்கு அருகே உள்ள ஜியாகோர்டா வனப்பகுதியில் ரூ.8 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் கமாண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நக்சல் கமாண்டர் தேவா என்ற திர்ரி மட்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் ஆயுதங்களுடன் குவாகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டில் நேற்று மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தர்பா பிரிவின் சிபிஐ மாவோயிஸ்ட்டின் கட்டேகல்யான் பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்த தேவா மீது தண்டேவாடா மற்றும் சுக்மா மாவட்டங்களில் ஒன்பது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தண்டேவாடா போலீசார் மற்றும் சிஆர்பிஎப் 230 பட்டாலியன் கூட்டுக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நக்சல்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையினாலோ அல்லது நக்சலைட்டுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளாலோ தேவா இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சரியான காரணம் தெரியவரும் என்று காவல் கண்காணிப்பாளர் பி சுந்தர்ராஜ் கூறினார். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.