என்.சி.இ.ஆர்.டி. 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி பற்றிய வரிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை


என்.சி.இ.ஆர்.டி. 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி பற்றிய வரிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை
x

பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி, இந்து முஸ்லிம் ஒற்றுமை, ஆர்.எஸ்.எஸ். தடை பற்றிய வரிகள் நீக்கப்பட்டிருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

புதுடெல்லி,

என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படுகிற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தில், 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் சில வரிகள் வருமாறு:-

* காந்திஜியின் மரணம், நாட்டின் வகுப்புவாத சூழ்நிலையில், மாயாஜால விளைவுகளை ஏற்படுத்தியது.

* இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான காந்தியின் நாட்டம், வகுப்புவாத இந்துக்களைத் தூண்டிவிட்டது.

* ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் சில காலம் தடை செய்யப்பட்டன.

இந்த வரிகள் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் பாடப்புத்தகங்களில் நீக்கங்கள் செய்யப்பட்டன.

அந்த வகையில், அப்போது 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட அதிகாரபூர்வ மாற்றத்தில், மேற்கண்ட வரிகள் நீக்கம் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு திருத்தம் செய்தபோது, குஜராத் கலவரங்கள், முகலாய அரசசபைகள் (தர்பார்கள்), நெருக்கடி நிலை, பனிப்போர், நக்சலைட்டுகள் இயக்கம் உள்ளிட்டவை நீக்கப்பட்டிருந்தன.

தற்போது மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய வரிகள் உள்ளிட்ட நீக்கப்பட்ட பகுதிகள் பற்றி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குனர் தினேஷ் சக்லானி கருத்து தெரிவிக்கையில், "பாடப்புத்தகங்களை திருத்தி மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கை கடந்த ஆண்டுதான் நடைபெற்றது. இந்த ஆண்டில் புதிதாக எதுவும் நடைபெறவில்லை" என தெரிவித்தார்.

அதே நேரத்தில், அப்போது அறிவிக்கப்பட்ட நீக்கங்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றிராத வரிகள், தற்போது நீக்கப்பட்டிருப்பது பற்றி அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.


Next Story