பிரஜ்வல் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை


பிரஜ்வல் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை
x

3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெங்களூருவில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அக்கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இந்த புகாரை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்த தேசிய மகளிர் ஆணையம், இது போன்ற நிகழ்வுகள் பெண்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாக தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக டிஜிபிக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.


Next Story