1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு: 7 தேர்வு மையங்களில் நடக்கிறது


1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு: 7 தேர்வு மையங்களில் நடக்கிறது
x

Image Courtacy: PTI

கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது.

புதுடெல்லி,

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' தேர்வின் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்டன. இதில் அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றதும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது. நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நாடு முழுவதிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனிடையே கருணை மதிப்பெண் அளித்ததை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மறுதேர்வு நடத்தக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது கடந்த 13-ந் தேதி விசாரணை நடந்த நிலையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கனு அகர்வால், 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு வருகிற 23-ந் தேதி மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி 1,563 மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேகாலயா, அரியானா, சத்தீஷ்கார், குஜராத் மற்றும் சண்டிகார் ஆகிய மாநிலங்களில் 7 தேர்வு மையங்களில் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளின் கண்காணிப்பில் தேர்வு நடத்தப்படும் என்றும், மறுதேர்வை சுமுகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

1 More update

Next Story