இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு


இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
x

அபுதாபி, பாங்காக், கோலாலம்பூர் உள்ளிட்ட 14 நகரங்களில் மே 5-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு வாயிலாகவே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்து வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் மே மாதம் 5-ந்தேதி மொத்தம் 554 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதே நாளில் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதன்படி துபாய், அபுதாபி, சார்ஜா(ஐக்கிய அரபு அமீரகம்), குவைத் சிட்டி(குவைத்), பாங்காக்(தாய்லாந்து), கொழும்பு(இலங்கை), தோகா(கத்தார்), காத்மாண்டு(நேபாளம்), சிங்கப்பூர், கோலாலம்பூர்(மலேசியா), லாகோஸ்(நைஜீரியா), மனாமா(பஹ்ரைன்), மஸ்கட்(ஓமன்) மற்றும் ரியாத்(சவுதி அரேபியா) ஆகிய 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story