நீட் தேர்வில் தவறு கண்டறியப்பட்டால் நடவடிக்கை: மத்திய கல்வி மந்திரி எச்சரிக்கை
நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
புதுடெல்லி,
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும், 7 ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சர்ச்சை எழுந்த நிலையில், 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) மாற்றியமைத்த பாடத்திட்டத்தின்படி, நீட் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதுதான் காரணம்.
முந்தைய ஆண்டுகளில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது இல்லை. இந்த ஆண்டு, மாநில பாடத்திட்டத்துக்கு ஏற்ப கேள்விகள் இருந்தன. குறைவான பாடத்திட்டம், அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் என்பதால், போட்டி அதிகரித்து, அதன் காரணமாக முழு மதிப்பெண் பெற்றவர்களும் அதிகரித்து விட்டனர்.
எந்த தேர்வு நடத்துவதிலும் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை. அதை சகித்துக்கொள்ள மாட்டோம். எல்லா அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால், தேசிய தேர்வு முகமையை பொறுப்பேற்க செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.