விவசாயிகளின் சொத்துகளை பாதுகாக்க கர்நாடகத்தில் விரைவில் புதிய சட்டம்


விவசாயிகளின் சொத்துகளை பாதுகாக்க கர்நாடகத்தில் விரைவில் புதிய சட்டம்
x

பெங்களூரு ஹெப்பாலில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் கடந்த 3-ந் தேதி வேளாண் கண்காட்சி மற்றும் மாநாடு தொடங்கியது.

பெங்களூரு-

வேளாண் கண்காட்சி

கர்நாடக அரசின் விவசாயத்துறை, விவசாய பல்லைக்கழகம் சார்பில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியை கவர்னர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்திருந்தார்.

இந்த கண்காட்சியை நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பார்வையிட்டார். கண்காட்சிகள் பங்கேற்ற விவசாயிகளுடன், அவர் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

பொருளாதார ரீதியில் வளர்ச்சி

கர்நாடகத்தில் விவசாயிகள், அவர்களது குடும்பத்தினருக்கு அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் பிள்ளைகள் படிப்பதற்காக புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் 10 லட்சம் விவசாயிகளின் பிள்ளைகள் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை கூலி தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், கார், ஆட்டோ டிரைவர்களின் குடும்பத்திற்கும் விரிவுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயிகளின் பிள்ளைகள் சிறப்பான முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். விவசாயிகள் மற்றும் பிற ஏழ்மையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, நாடும் வளர்ச்சி அடைய சாத்தியமாகும். 60 சதவீதம் பேர் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கிறார்கள்.

விவசாய பல்கலைக்கழகங்கள் அரசுடன்...

பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்துறையையும் அரசு பெரிதும் நம்பி இருக்கிறது. இதற்காக விவசாய பல்கலைக்கழகங்கள் அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும். விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக புதிய தொழில் நுட்பம், அறிவுரைகளை தெரிவிக்க வேண்டும். இதுபற்றி விவசாய பல்கலைக்கழகங்கள் சிந்தித்து திட்டங்களை வகுக்க வேண்டும். கர்நாடக அரசு விவசாயிகளை நண்பர்கள் போல் பாவிக்கும் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இந்த ஆண்டு 10 லட்சம் விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வதிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு விவசாய பல்கலைக்கழகங்களின் வழிகாட்டுதல்களும் விவசாயிகளுக்கு முக்கியமானதாகும். விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வளர்ச்சி அடைய தேவையான உதவிகளை செய்ய கொடுக்க அரசும் தயாராக உள்ளது.

விவசாயிகளின் பங்கு காரணம்

தற்போது ஒரேமுறை பயிர்சாகுபடியை தவிர்த்து, மக்களுக்கு பிடித்தமான உணவு தானியங்களை விவசாயிகள் உற்பத்தி செய்து லாபம் சம்பாதித்து வருகிறார்கள். அதுபோன்று விவசாயத்தில் மாற்றம் செய்து லாபம் சம்பாதிக்கும் விவசாயிகளை அரசு கவுரவித்து வருகிறது. அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். 130 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவது சாதாரண விஷயம் இல்லை. இதற்கு மிகுந்த சிரமத்தை அனுபவிக்க வேண்டும்.

அரசு கொண்டு வந்துள்ள சட்ட திட்டங்கள், வழிகாட்டுதல்களும் ஒரு காரணமாகும். நமது நாடு வளர்ச்சி அடைவதற்கு விவசாயிகளின் பங்கும், அவர்களது உழைப்பும் ஒரு காரணமாகும். விவசாய திட்டங்கள், விவசாயத்துறைக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டிய அவசியமாகும். தற்போது விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. குறுகிய நிலத்தில் விவசாயம் செய்வதை காட்டிலும், 2 அல்லது 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டுகிறார்கள்.

புதிய சட்டம் கொண்டு வரப்படும்

விவசாயம் வளர்ந்தாலும், விவசாயிகள் வளர்ச்சி அடைவதில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. விவசாயம் தான் நமது வாழ்க்கை. விவசாயிகள் மழையை நம்பியே இருக்க வேண்டிய நிலை உள்ளது. மழை குறைவாக பெய்தாலும் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. மழை அதிகமாக பெய்தாலும் பயிர்கள் சேதம் அடைகிறது. விவசாய பொருட்களை வாங்கி விற்கும் சங்கங்கள் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பாதிக்கிறார்கள். மாநிலத்தில் 80 சதவீதம் பேர் சிறு விவவசாயிகளே உள்ளனர். அவர்களுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் கிடைத்தால் உதவியாக இருக்கும்.

வறட்சி, மழை பாதிப்பால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். இதற்காக விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்குவதற்காக, அவர்களது சொத்துகள் ஜப்தி செய்யப்படுகிறது. சொத்துகளை வங்கிகள் ஏலம விடுகிறார்கள். இதனை தடுத்து விவசாயிகளை பாதுகாப்பதே நமது நோக்கம். விவசாயிகளின் சொத்துகளை பாதுகாக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார். இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் பி.சி.பட்டீல், அசோக், முன்னாள் முதல்-மந்திரி சதானந்த

கவுடா கலந்து கொண்டனர்.


Next Story