புதிய பாஸ்போர்ட்; ராகுல் காந்திக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு


புதிய பாஸ்போர்ட்; ராகுல் காந்திக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு
x

ராகுல் காந்தியின் புதிய பாஸ்போர்ட் மனுவுக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என மக்களவை செயலகம் அறிவித்தது. கடந்த மார்ச் முதல் எம்.பி. பதவியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது தூதரக அந்தஸ்திலான பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைத்து உள்ளார்.

இந்த நிலையில், ஒரு பொதுமுறையான புதிய பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு விண்ணப்பிக்க முடிவு செய்து, அதற்கான அனுமதி கோரி, டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் தடையில்லா உத்தரவை வழங்க வேண்டும் என நேற்று மனு ஒன்றை அவர் தாக்கல் செய்து உள்ளார்.

இந்த மனு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் வைபவ் மேத்தா முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அவரது இந்த மனுவுக்கு முன்னாள் எம்.பி. மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினால், அது நேசனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடும் என நேரில் ஆஜராகி கூறியுள்ளார்.

எனினும், இந்த வழக்கு 2018-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ளது என்றும், அவர் வெளிநாட்டுக்கு பயணம் செய்து வருகிறார் என்றும் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. பயணிப்பது ஓர் அடிப்படை உரிமை என்றும் தெரிவித்தது.

ராகுல் காந்தியின் வழக்கறிஞர்கள் தரன்னும் சீமா, நிகில் பல்லா மற்றும் சுமித் குமார் உள்ளிட்டோரும், அவருக்கு எதிராக குற்ற நடவடிக்கைகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றும் வெளிநாட்டுக்கு பயணம் செய்வது என்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு நேசனல் ஹெரால்டு வழக்கில், ஜாமீன் வழங்கும்போது ராகுல் காந்திக்கு கோர்ட்டு பயணம் தொடர்பாக எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இந்த நேசனல் ஹெரால்டு வழக்கானது, காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சிலருக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமி சார்பில் தொடரப்பட்டு உள்ளது. டெல்லி கோர்ட்டில் அதற்கான விசாரணை, வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்யும்படி முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சுவாமிக்கு காலஅவகாசம் வழங்கி, வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு நீதிபதி வைபப் ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளார்.


Next Story