அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; பெங்களூருவில் பயங்கரவாதி கைது


அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; பெங்களூருவில் பயங்கரவாதி கைது
x

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நிரந்தர தொடர்பில் இருந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள்.

மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை

பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல்களும் வருகின்றன. அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெங்களூருவில் எப்போதும் போலீசார் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் ஒரு நபர் பெங்களூருவில் பதுங்கி இருப்பது பற்றி கர்நாடகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு படை போலீசாருக்கும், தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த நபரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

இந்த நிலையில், பெங்களூரு தனிச்சந்திரா அருகே மஞ்சுநாத் நகரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வரும் நபர் வசித்து வருபவது பற்றிய தகவல்களை போலீசார் உறுதி செய்தார்கள். இதையடுத்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் அந்த வீட்டை சுற்றி வளைத்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த வீட்டில் வசித்து வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அதாவது கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு போலீசாரும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் (என்.ஐ.ஏ.) இணைந்து அவரை கைது செய்திருந்தார்கள்.

விசாரணையில், அவரது பெயர் ஆரிப் என்று தெரிந்தது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் என்ஜினீயராக அவர் பணியாற்றி வந்துள்ளார். ஆரிப்புக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்ணை தான் அவர் திருமணம் செய்திருந்தார். முதலில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து ஆசிப் வேலைக்கு சென்றுள்ளார்.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு

திருமணத்திற்கு பின்பு தனது மனைவி, குழந்தையுடன் தனிச்சந்திரா அருகே மஞ்சுநாத் நகரில் வசித்து வந்துள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் ஆரிப் நிரந்தர தொடர்பில் இருந்து வந்ததை விசாரணையில் போலீசார் உறுதி செய்துள்ளனர். அதாவது அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு சம்பந்தப்பட்ட டெலிகிராம் குரூப், பிற குழுக்களில் ஆரிப் சேர்ந்து நிரந்தர தொடர்பில் இருந்து வந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் அடுத்த மாதம் (மார்ச்) பெங்களூருவில் இருந்து ஈரானுக்கு சென்று, அங்கிருந்து சிரியாவுக்கு செல்லவும் ஆரிப் திட்டமிட்டு இருந்தார். இதற்கான விமான டிக்கெட்டுகளையும் அவர் முன்பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு முறையும் ஈரானில் இருந்து சிரியாவுக்கு செல்ல ஆரிப் முயற்சி செய்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரால் சிரியாவுக்கு செல்ல முடியாமல் போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யார்-யாருடன் தொடர்பு

அல்கொய்தா அமைப்புடன் ஆரிப் நிரந்தர தொடர்பில் இருந்தது, சிரியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது உள்ளிட்ட தகவல்களை திரட்டிய கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இணைந்து ஆரிப்பை கைது செய்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான ஆரிப்பிடம் இருந்து ஒரு கம்ப்யூட்டர் மற்றும் 2 கார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவற்றை ஆய்வு செய்த பின்பு தான், யார்? யாருடன் எல்லாம் ஆரிப்புக்கு தொடர்பு இருப்பது பற்றிய தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாசவேலையில் ஈடுபட திட்டமா?

பெங்களூருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரிப் தங்கி இருந்ததுடன், இங்கு இருக்கும் போதே பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்ததால், பெங்களூருவில் ஏதேனும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுகுறித்து ஆரிப்பிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் ஆரிப்பின் மனைவியிடமும் நேற்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதாவது ஆரிப் எங்கெல்லாம் சென்று வந்தார்?. அவரை சந்திக்க யாரெல்லாம் வருவார்கள்? பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு? உள்ளிட்டவை குறித்து ஆரிப்பின் மனைவியிடமும் போலீசார் விசாரித்து சில தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் தற்போது அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்யவும் முடிவு செய்திருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.

அல்கொய்தாவில் சேர திட்டம்

மேலும் மனைவி, குழந்தையை இந்தியாவில் விட்டுவிட்டு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் சேருவதற்காக ஆப்கானிஸ்தான் செல்வதற்கும் ஆரிப் திட்டமிட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதுபற்றியும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story