மங்களூரு: ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த வழக்கு விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்!


மங்களூரு: ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த வழக்கு விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்!
x

மங்களூரு நகர காவல்துறையில் இருந்த இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்கும்.

மங்களூரு,

மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்த ஒரு நபர், தேடப்பட்டு வந்த சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த பயங்கரவாதி ஷாரிக் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றதும், ஆட்டோவில் செல்லும்போது அது வெடித்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை என்ஐஏ-வுக்கு மாற்ற மாநில அரசு முடிவு கடந்த மாதம் செய்தது. மேலும், இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இந்த மாத தொடக்கத்தில் உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை என்ஐஏ ஏற்றுள்ளது. இதுகுறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் என்.சஷிகுமார் நேற்று கூறியதாவது: மங்களூரு நகர காவல்துறையில் இருந்த இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்கும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து என்ஐஏ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷாரிக்கிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்

1 More update

Next Story