ராகுல், கார்கேவுடன் நிதிஷ்குமார் சந்திப்பு: வரக்கூடிய தேர்தல்களை கூட்டாக சந்திக்க முடிவு
டெல்லியில் ராகுல் காந்தியையும், கார்கேவையும் நிதிஷ்குமார் சந்தித்துப்பேசினார். வரக்கூடிய தேர்தல்களை கூட்டாக சந்திக்க முடிவு எடுத்தனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு தயாராகி வருகிறது. இந்தத் தருணத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நிதிஷ்குமார் நேற்று முன்தினம் தலைநகர் டெல்லிக்குச் சென்றார்.
தலைவர்கள் சந்திப்பு
அங்கு அவர் காங்கிரஸ் தலைவர் கார்கேவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசியத்தலைவரான ராஜீவ்ரஞ்சன் சிங், பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ராஷ்டிரிய ஜனதாதளம் மூத்த தலைவர் மனோஜ் ஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். அனைவரும் கார்கே இல்லத்தில் மதிய விருந்து சாப்பிட்டனர்.
பேசியது என்ன?
இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்றுதிரட்டுவதற்கான வாய்ப்புகள் பற்றி விரிவாக பேசப்பட்டது.
மேலும் பா.ஜ.க,.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கவும் உறுதி எடுத்துக்கொண்டனர்.
கூட்டாக தேர்தல்களை சந்திக்க முடிவு
இந்த சந்திப்பைத் தொடர்ந்து தலைவர்கள் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நடத்தினோம். நிறைய பிரச்சினைகள் குறித்து பேசினோம். நாங்கள் அனைத்துக்கட்சிகளை ஒன்றிணைக்கவும், வரக்கூடிய தேர்தல்களை கூட்டாக சந்திக்கவும் முடிவு எடுத்தோம். இதற்காக நாங்கள் அனைவரும் உழைப்போம் என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்புக்கு முயற்சி எடுத்த நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் மற்றும் பிற தலைவர்களின் முயற்சியை ராகுல் காந்தி பாராட்டினார்.
எத்தனை கட்சிகள்
"எத்தனை எதிர்க்கட்சிகள் இதில் ஒன்றிணையும்?" என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் பதில் அளிக்கையில், " இது ஒரு செயல்முறை. நாங்கள் நாட்டுக்காக எதிர்க்கட்சிகளின் தொலைநோக்குப்பார்வையை உருவாக்குவோம். அந்த எல்லாக் கட்சிகளும் ஒன்றிணையும். நாட்டின் அரசியல் சாசன நிறுவனங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டு போராடுவோம். இந்த விஷயத்தில் முக்கிய நடவடிக்கையை இன்று எடுத்துள்ளோம்" என குறிப்பிட்டார்.
நிதிஷ்குமார் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் இன்னும் அதிகளவிலான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிப்போம். இன்றைய விவாதத்தின் அடிப்படையில் நாங்கள் முன்னோக்கி செல்வோம். நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வோம், ஒன்றாக அமர்வோம், ஒன்றாக உழைப்போம். இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.
கார்கே டுவிட்டர் பதிவு
மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "நாங்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம். ஜனநாயகத்தைக் காப்போம். நாங்கள் ஒன்றுபட்டு, மக்களின் குரலை உயர்த்துவதற்கும், நாட்டுக்கு புதியதோர் திசையைக் காட்டவும் தீர்மானித்துள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
கெஜ்ரிவாலுடன் சந்திப்பு
பின்னர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவுடன் சென்று, டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் விவரங்கள் தெரிய வரவில்லை.