"எங்கள் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை" - மோகன் பகவத்-இமாம் சந்திப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். கருத்து
சிறுபான்மையினருடன் நல்லுறவை ஏற்படுத்த மோகன் பகவத்-இமாம் உடனான சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.
புதுடெல்லி,
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாமாக உள்ள டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசியை கஸ்தூரிபா காந்தி மார்க் மசூதியில் நேற்று சந்தித்து பேசினார்.
நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்த இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடையேயான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக மத்திய டெல்லியின் கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள ஒரு மசூதிக்கு மோகன் பகவத் சென்றார். பின்னர் வடக்கு டெல்லியில் உள்ள ஆசாத்பூரில் உள்ள மதராஸாவில் சென்று அங்குள்ள தஜ்வீதுல் குரானைப் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை 'ராஷ்டிர பிதா'(தேசத்தின் தந்தை) என்று குறிப்பிட்டார்.
அதே நேரம் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு எதிர்வினையாற்றும் வகையில், மோகன் பகவத் இந்த திடீர் சந்திப்பை மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, "எங்கள் அமைப்பின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. மோகன் பகவத்-இமாம் உடனான சந்திப்பு என்பது சிறுபான்மையினருடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
இது போன்ற சந்திப்புகளை 20 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் ஏற்படுத்தினார். சிலர் தவறான புரிதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.