ராகுல் காந்தி பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது: ஜெய்ராம் ரமேஷ்
இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரிலான பாதயாத்திரையை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, கடந்த 18-ந்தேதி ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நேற்று காலை இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். இதற்கு கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் கேட்டு கொண்டார்.
இந்த சூழலில், காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது பற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, காஷ்மீர் துணை நிலை கவர்னரை நான் சந்தித்து பேசினேன். காஷ்மீரில் உள்ள எங்களுடைய அனைத்து தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது என்பது அவர்களுடைய பொறுப்பு. என்ன நடந்தபோதும், இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினார்.
ஜம்மு புறநகர் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக பாரத் ஜோடோ யாத்திரைக்கு இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு சர்வதேச எல்லை பகுதியில் உள்ள ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையின் ஹிரா நகர் பகுதியிலிருந்து பாதயாத்திரை தொடங்கியது.
இதனால், ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராகுல் காந்தி பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே தனது நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுபற்றி அக்கட்சியின் தொலைதொடர்புக்கான பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சம்பா நகரில் பேசும்போது, ராகுல் காந்தியின் பாதுகாப்பு தொடர்புடைய விசயத்தில் எந்தவித சமரசமும் கிடையாது.
அதுவே எங்களுடைய அதிக முக்கியத்துவம் வாய்ந்த விசயமும் ஆகும். பாதுகாப்பு முகமைகள் எங்களிடம் என்ன கூறியுள்ளனவோ, அதனை பின்பற்றி நாங்கள் தொடர்ந்து செல்வோம் என்று அவர் கூறியுள்ளார்.